ஈரோடு: ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகர்ப்பகுதி, சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு நாள்தோறும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்றுவருகின்றனர்.
பெரும்பாலும், இந்தத் தொழிலாளர்கள் புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து அரசு, தனியார் பேருந்து மூலமாகவே திருப்பூருக்கு வேலைக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில், சத்தியமங்கலத்திலிருந்து திருப்பூருக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அப்போது, திருப்பூர் நோக்கிச் செல்லும் தனியார் பேருந்து வந்தது.
நிறுத்தத்தில், அரசுப்பேருந்து நிற்பதைப் பார்த்த தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் புறப்படும் நேரம் கடந்தும் ஏன் இன்னும் பேருந்தை எடுக்காமல் இருக்கிறீர்கள் என அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அரசு, தனியார் பேருந்து இடையே டைமிங் தகராறு இதனிடையே, அரசுப்பேருந்தில் இருந்த பயணிகள் இறங்கி தனியார் பேருந்தில் ஏறினார். இதனால், ஆத்திரமடைந்த அரசுப்பேருந்து ஓட்டுநர், தனியார் பேருந்தை இயக்கவிடாமல், குறுக்கே அரசுப்பேருந்தை நிறுத்தினார். இதில், கோபமடைந்த பயணிகள் அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களிடையே பேசி சமாதானப்படுத்தி பேருந்துகளை இயக்குமாறு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அரசு, தனியார் பேருந்துகள் இரண்டும் புறப்பட்டுச் சென்றன.
இதையும் படிங்க:பொருள்கள் வாங்குவதுபோல நடித்து ரூ.3 லட்சம் திருடிய பெண்