பேய் இருக்கா இல்லையா என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக உறுதிபடுத்தப்படவில்லை. ஆனாலும் பலரும் பேய் இருக்கிறது என்பதை நம்பி வருவதுடன், அதன்மீது பெரும் அச்சத்தையும் கொண்டுள்ளனர். அவர்களின் நம்பிக்கைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக சிசிடிவி காட்சிகளில் சிறு உருவம் பறப்பது போன்ற காட்சிகள் அவ்வப்போது வெளியாகி அவர்களைத் திகிலூட்டும்.
அந்த வரிசையில், ஈரோடு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சி பேய் நம்பிக்கை கொண்டவர்களை அச்சமடைய வைத்துள்ளது. அந்த வீடியோவில், சாலையில் இருந்த சிமெண்ட் மூட்டையின் அருகில் தோன்றிய வெள்ளை நிறம் கொண்ட உருவம் ஒன்று சிறிதுசிறிதாக பெரிதாகி பின்னர் மறைந்துள்ளது. இந்தச் சோதனைச்சாவடி அருகே மின் மயானமும், சுடுகாடும் அமைந்துள்ளதால், அது ஏதோ ஒரு ஆவி தான் என்று நினைத்து அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.