ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஊஞ்சப்பாளையம் பட்டறை மேட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். 34 வயதான இவர் பெருந்துறை மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக வேலை செய்து வந்தார். சுரேஷ்குமாருக்கு விடுமுறை என்பதால் வீட்டிலிருந்த போது அந்த பகுதியில் மின் தடை ஏற்படவே, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மின் தடையைச் சரி செய்ய சுரேஷ்குமாரை அழைத்துள்ளார். அந்தப் பகுதி மின்வாரிய ஊழியர் விடுமுறை என்பதால் சுரேஷ்குமார் டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து விட்டு மின் கம்பத்தில் ஏறி மின் தடையைச் சரி செய்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக யாரோ டிரான்ஸ்பார்மரை ஆன் செய்யவே, மின் கம்பத்திலேயே சுரேஷ்குமார் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கடத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சுரேஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சுரேஷ்குமார் மின்கம்பத்தில் ஏறி வேலை செய்துகொண்டிருந்தபோது மாக்கினாங்கோம்பை, மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவர் மின்கம்பத்தில் ஆள் வேலை செய்வது தெரியாமல் டிரான்ஸ்பார்மரை ஆன்(ON) செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பூபதியைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.