ஈரோடு: 'திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்' என்பார்கள், நம் முன்னோர். ஒருவருக்கு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் இன்ப, துன்பங்கள் அனைத்திலும் மனது ஒத்த தம்பதிகளாக மக்கள் பயணிக்கவேண்டியே இந்த 'சொல்லாடல்' பிறந்திருக்கவேண்டும்.
அப்படியொரு மனது ஒத்த தம்பதியே கருப்பையா-சித்ரா இணையினர். மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட காந்தியவாதிகளான இருவரும், அகில இந்திய காந்திய இயக்கத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளர்களாகவும் உள்ளனர்.
காந்திய சிந்தனைகளோடு பயணித்த தம்பதியினர்:
நாட்டின் ஒற்றுமையை பொதுமக்களிடையே கொண்டுசேர்க்கும் வகையில், குஜராத், பீகார், ஒடிசா, காஷ்மீர், பஞ்சாப் என நாட்டின் பல்வேறு பகுதிகளை, கடந்த 31 ஆண்டுகளாக மிதிவண்டி மற்றும் நடைப்பயணம் மூலம் பயணித்து, சுமார் 96 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை காந்திய சிந்தனைகளைப் பரப்புரை செய்து கடந்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது, நாட்டிற்கு சுதந்திரம் அடைந்து பவள விழா ஆனதை ஒட்டி, கடந்த 2021 ஆகஸ்ட் 15ஆம் தேதி 'சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு சமர்ப்பண யாத்திரை' என்ற பெயரில் ஒரு நடைப்பயணத்தினை சென்னிமலையில் தொடங்கி, புதுச்சேரி நோக்கிப் பயணம் மேற்கொள்ளத்தொடங்கினர். செப். 11ஆம் தேதி பாரதியார் நினைவு நாள் அன்று புதுச்சேரியில் உள்ள தமிழ்ச்சங்கத்தில் நடைபயணத்தை நிறைவு செய்யவும் அவர்கள் முடிவு செய்திருந்தனர்.
விதி செய்த சதி:
அப்போது தான் அந்த கோரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2021 ஆகஸ்ட் 24ஆம் தேதி நாமகிரிப்பேட்டை செல்வதற்குள் நாய்கள் கடிக்க வரும்போது, நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு சித்ரா படுகாயம் அடைந்துள்ளார்.