கரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆனால், மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன.
ஆனால், அரசுப் பள்ளியில் பயிலும் சில மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள ஆண்ட்ராய்டு செல்போன் இல்லை. அவர்கள் வீட்டிலும்கூட செல்போன்கள் இல்லை என்பதுதான் கள யதார்த்தம். இந்நிலையில், ஈரோடு அருகேயுள்ள நாதகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனியார் அமைப்பின் சார்பில் இலவசமாக ஆண்ட்ராய்டு செல்போன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்றுவருகின்றனர். அதில் 10 மாணவ மாணவிகளுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கும் வசதியில்லை என்பதைக் கண்டறிந்த தனியார் அமைப்பினர் அந்த மாணவ மாணவிகளுக்கு இலவசமாக ஆண்ட்ராய்டு செல்போன் வழங்கினர்.
அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச ஆண்ட்ராய்டு போன் வழங்கிய நிகழ்ச்சி மேலும், பள்ளிகள் திறக்கப்படும்வரை அவர்களுக்கான இணைய கட்டணச் செலவையும் ஏற்றுக்கொண்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஆண்ட்ராய்டு செல்போன் வசதியின்றி ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் தவித்துவரும் மாணவ மாணவிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக ஆண்ராய்டு செல்போன் தரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வாங்கிக்கொடுத்த ஆசிரியர்கள்