ஈரோடு: பெருந்துறையைச் சேர்ந்த 27 இளைஞர் ஒருவர் செல்போன் செயலி மூலம் தன்பாலின ஈர்ப்புக்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எதிர்முனையில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், இளைஞரை ஆள் நடமாட்டம் இல்லாத குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து உள்ளனர்.
அப்போது அங்கு இருவரும் தனிமையில் இருந்தபோது, அங்கு வந்த மூவர் கொண்ட கும்பல் இளைஞரைத் தாக்கி அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக, பெருந்துறை காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த பெருந்துறை போலீசார் திருப்பூரைச் சேர்ந்த ஆனந்தகுமார், தினேஷ், அங்குகுமார் மற்றும் நந்தகுமார் ஆகிய நான்கு பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஆனந்தகுமார் உள்ளிட்டோர் செல்போன் செயலி மூலம் தன்பாலின ஈர்ப்புக்கு அழைப்பு விடுத்து தனியாக வரும் நபர்களிடம் பணம், நகை போன்றவற்றை கொள்ளையடித்துச் செல்வது தெரிய வந்துள்ளது.
இந்த நபர்கள் ஈரோடு மட்டுமின்றி சங்ககிரி, பெருமாநல்லூர் உட்பட பல்வேறு இடங்களிலும் தங்களது கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இதனையடுத்து நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நான்கு பேரிடம் இருந்தும் சொகுசு கார், நான்கு பவுன் தங்க கட்டி மற்றும் 4 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர், போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:சேரி வார்த்தை விவகாரம்; “குஷ்பு பேசியதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை” ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு!