ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் ஆயிபாளையத்தில் காய்கறி கடை நடத்திவருபவர் சிவபிரகாஷ். கடந்த 23ஆம் தேதி மாலை 5 மணியளவில் அவரது காய்கறிக் கடையில் விற்பனை செய்துகொண்டிருந்தபோது, பல்சர் பைக்கில் இரு நபர்கள் வந்து பூண்டு 35 ரூபாய்க்கு வேண்டும் என்று கேட்டு ஐநூறு ரூபாய் நோட்டை கொடுத்துள்ளனர். 500 ரூபாய் நோட்டை ஆய்வுசெய்த சிவபிரகாஷ் கள்ளநோட்டு எனத் தெரிந்து சத்தம் போட்டுள்ளார்.
அப்போது, இருவரும் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அதில், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பல்லகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த பிரபு (28), மற்றொருவர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டைச் சேர்ந்த அழகுதுரை என்பது தெரியவந்தது.
பின்னர் அவர்கள் இருவரையும் பொதுமக்கள் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் நம்பியூர் காவல் துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைதுசெய்தனர்.