கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நாச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால்(32). இவர் கோயில்பாளையம் தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி(24) நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 17ஆம் தேதி சனிக்கிழமை அன்று சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே தேள்கரடு வீதியில் உள்ள சக்தி மருத்துவமனைக்குச் சென்றனர்.
ஞாயிறு அதிகாலை சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், புதன்கிழமை குழந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் குழந்தையின் பெற்றோர் சக்தி மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் கஸ்தூரி இல்லாததால் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்தவற்றை தெரிவித்துள்ளனர்.
மருத்துவரிடம் நீதி கேட்கும் உறவினர்கள் இந்நிலையில், அவர் வருவதாகச் சொல்லி நீண்ட நேரமாகியும் வரவில்லை. மருத்துவர் வராததால் உடனடியாக மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து வந்த பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு குழந்தையின் சடலத்தை மருத்துவர் கஸ்தூரி முன் வைத்து நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் மருத்துவர், மருத்துவமனை ஊழியர்கள் மெத்தனப்போக்குடன் இருந்ததால் குழந்தை இருந்ததாகக் கூறி மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குழந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.