முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வு குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அதிமுகவின் பெயரைத் தவறாக பயன்படுத்தியதாகக் கூறி, அவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அந்த வழக்கில் பிணை பெற்று, தற்போது அவர் வெளியில் உள்ளார். இந்தச் சூழலில் பழனிசாமி ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகேயுள்ள ஓட்டப்பாறையில் உள்ள தனது வீட்டுக்கு வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நான் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை என்று கூறிவருகிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு குறித்து டெல்லி நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நான் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தேர்தல் வழக்கை வேறு கட்சியினர் தாக்கல் செய்தால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமுமே ஏற்றிருக்காது. நான் அதிமுகவில் இல்லாமல், எப்படி என் வழக்கை எடுத்துக்கொள்கிறார்கள். எனவே, நான் அதிமுகவில் தான் உள்ளேன்.
மேலும் 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதிநீக்கப் பிரச்னைக்கு சபாநாயகர் முடிவு காண்பார் என்று தீர்ப்பு வழங்கியிருப்பது முரணாக இருப்பதால், உச்ச நீதிமன்றம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து பொதுவான தீர்ப்பை வெளியிட வேண்டும். சசிகலாவைப் பொறுத்தவரை அவரது தண்டனைக்காலம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் முடிவடைந்தாலும், அவரது நன்னடத்தை உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தாண்டின் செப்டம்பர் மாதத்திற்குள் அவர் வெளியில் வரவே வாய்ப்பு அதிகமாக உள்ளது.