ஈரோடு மாவட்டம், அறச்சலூர் உதயபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி தர்மன் (70). இவர் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி தனது தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்போது தண்ணீருடன் வந்த குப்பைகளை வெளியே எடுத்து அகற்றினார். இதில் அருகில் உள்ள விவசாயத் தோட்டத்தில் குப்பை விழுந்துள்ளது. அந்த நிலத்தின் உரிமையாளர்களான அறச்சலூர், வடுகபட்டி, காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி மற்றும் அவரது தம்பிகளான சந்தானம், லட்சுமி பெருமாள், உறவினராக சக்திவேல் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.
குப்பைகளை எதற்காக தனது தோட்டத்தில் கொட்டியதாகக் கேட்டு அவர்கள் நான்கு பேரும், தர்மனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவர்களுக்கிடையே தகராறு முற்றியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சந்தானம் தனது கையில் வைத்திருந்த மண்வெட்டியை திருப்பி வைத்து, தர்மனைத் தாக்கினார்.
மேலும், லட்சுமி பெருமாளும், ராமசாமியும் மண்வெட்டியின் பிடியால் தர்மனின் நெஞ்சுப்பகுதியில் அடித்துள்ளனர். சக்திவேல் அங்கிருந்த கட்டையை எடுத்து தர்மனைத் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த தர்மனை அக்கம் பக்கத்தினர் அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.