தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிக்குமா சிறுத்தை? பொறிவைத்த வனத் துறையினர்! - ஈரோடு

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே விவசாயத் தோட்டத்தில் புகுந்து வெள்ளாட்டை அடித்துக்கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத் துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.

சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் வைத்துள்ள கூண்டு.

By

Published : Aug 18, 2019, 1:55 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பசுவபாளையம் கிராமத்தில் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்தத் தோப்பில் அரசப்பன் என்ற கூலித்தொழிலாளி குடும்பத்துடன் தங்கி வேலை செய்துவருகிறார். அரசப்பன் மூன்று வெள்ளாடுகளை வைத்து பராமரித்துவந்தார். தினமும் வெள்ளாடுகளைத் தென்னந்தோப்பில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

இந்நிலையில், தென்னந்தோப்பில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த வெள்ளாடுகள் வேகமாக ஓடிவந்தன. இதைக்கண்ட அரசப்பன் தென்னந்தோப்பில் சென்று பார்த்தபோது சிறுத்தை ஒரு வெள்ளாட்டைப் பிடித்து கடித்துக் கொண்டிருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அரசப்பனை கண்டதும் அந்தச் சிறுத்தை வெள்ளாட்டை விட்டுவிட்டு தாவிக்குதித்து ஓடி மாயமானது. சிறுத்தை நடமாட்டம் குறித்து உடனடியாக பவானிசாகர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற வனச்சரகர் ஜான்சன் தலைமையிலான வனத் துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். பின்னர், இரவு முழுவதும் துப்பாக்கி ஏந்தியபடி ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததால் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கூண்டு வைக்கப்பட்டதில் சிறுத்தை சிக்கவில்லை.

சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத் துறையினர்

மீண்டும் தற்போது சிறுத்தை நடமாடுவதால் விவசாயிகள், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து தென்னந்தோப்பில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு வைத்து அதில் ஆட்டை கட்டி வைத்துள்ளனர். மேலும் வனத் துறையினர் தென்னந்தோப்பில் துப்பாக்கி ஏந்தியபடி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்துவருகின்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details