பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாதவை குறித்து வனச்சரகர் வீடியோ வெளியீடு ஈரோடு: நச்சுத்தன்மை கொண்ட பாம்புகள் எதிர்பாராத விதமாக மனிதர்களைத் தீண்டும் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்துத் தாளவாடி வனச்சரகர் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது, "இந்தியாவில் பாம்புக் கடியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக 80 சதவீதம் இந்தியர்கள் உயிரிழக்கின்றனர். இதற்குக் காரணம் பாம்புக் கடி குறித்துச் சரியான புரிதல் இல்லை. பாம்பு கடித்தால் எந்த மாதிரியான முதலுதவிகளைச் செய்ய வேண்டும் என்கின்ற சரியான புரிதல் மக்களிடத்தில் இல்லை.
இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் நான்கு வகையான நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகள் உள்ளன. நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டுவிரியன் ஆகிய நான்கு வகை பாம்புகள் மிக நச்சுத்தன்மை கொண்டது.
இந்த வகை பாம்புகளால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நச்சுத்தன்மை வாய்ந்த பாம்பு மனிதனைக் கடித்து விட்டது என்றால் முதலில் நாம் பதற்றம் அடையக் கூடாது. பதற்றம் அடைவதால் இதயத்துடிப்பு அதிகரித்து ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அவ்வாறு அதிகரிப்பதால் பாம்பின் விஷம் ரத்தத்தில் கலந்து உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.
பாம்பு கடித்து விட்டால் உடனடியாக கை மற்றும் கால்களில் அணிந்துள்ள அணிகலன்கள் குறிப்பாக மோதிரம், மெட்டி ஆகியவற்றை உடனடியாக கழற்றிவிட வேண்டும். பாம்பு கடித்த இடத்தில் ஐஸ் போன்ற குளிர்ச்சியான பொருட்களை வைக்கக்கூடாது என மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.
திரைப்படத்தில் வருவது போன்று பாம்பு கடித்தவரின் வாயில் விஷத்தை உறிஞ்சுகிறேன் எனக் கூறி வாயை வைத்து உறிஞ்சக்கூடாது. வாய் வைத்து உறிஞ்சுவதால் அவர்களுக்கும் விஷத்தன்மை பரவ வாய்ப்பு உள்ளது. மனிதர்களைப் பாம்பு கடித்த உறுப்புகளில் இரண்டு இன்ச் தள்ளிக் கட்டுப் போட வேண்டும். இதன் காரணமாக ரத்த ஓட்டத்தைக் குறைக்கலாம்.
பாம்பு கடிபட்ட நபருக்குத் தண்ணீர் உணவு கொடுக்கக்கூடாது. இதுபோன்று செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பாம்பு கடித்த நபரை மருத்துவமனையில் சேர்க்க வாகனம் வருவதற்குத் தாமதமானால் அவர்களை இடது புறமாகச் சாய்த்துப் படுக்க வைக்கலாம். பாம்பின் தலை பகுதி முக்கோண வடிவிலிருந்தால் மிகவும் நச்சுத்தன்மை கொண்டது.
பாம்பு தீண்டிய இடத்தில் பாம்பின் பற்கள் ஆழமாகப் பதியும் வகையில் இரண்டு புள்ளிகள் இருந்தால் மிக நச்சுத்தன்மை வாய்ந்தது. சில சமயங்களில் பாம்பு தீண்டிய நபர்கள் பாம்பு கடித்ததை மறந்து விட்டு அதை அடித்து கொன்று அதை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்வது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. அதெல்லாம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
எதிர்பாராத விதமாக நமது வீடுகளில் பாம்புகள் நுழையும் பொழுது வனத்துறை, தீயணைப்புத்துறை, பாம்பு பிடிக்கும் தன்னார்வலர்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம். பாம்பைப் பிடித்தவுடன் அதனுடன் நின்று புகைப்படம் செல்பி எடுப்பது உயிருக்கு ஆபத்தாக முடியும். இது போன்ற செயல்களால் மனிதர்களைப் பாம்பு கடித்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கலாம்" என வீடியோவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:கேரளாவில் மதவழிபாட்டு நிகழ்ச்சியில் வெடி விபத்து - என்ஐஏ சோதனை என தகவல்!