ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகைப்பூ, முல்லை, சம்பங்கிச் சாகுபடி செய்யப்படுகிறது. தோட்டத்தில் பறிக்கும் பூக்களை சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏல விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். விவசாயிகள் முன்னிலையில் பூக்கள் ஏலம் விடப்படுகிறது. சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு பூக்களின் விலை 10 மடங்கு வரை உயர்ந்துள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ரூ. 300க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ கிலோ ரூ.1500க்கும், சம்பங்கி கிலோ ரூ.30 இல் இருந்து ரூ. 100 ஆகவும், அரளிப்பூ கிலோ ரூ.20ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆயுதபூஜை தொடங்கப்பட்ட நாளில் சராசரியாக பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி, ராயக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து செவ்வந்திப்பூக்கள் கொள்முதல் செய்யப்பட்டு சத்தியமங்கலம் பூமார்க்கெட்டில் விற்கப்பட்டது. தற்போது செவ்வந்தி பூ கிலோ ரூ.220 வரை விற்கப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் பூ மாலை தேவை அதிகரித்துள்ளதால் பூக்கடைகளில் பூ மாலைத் தயாரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். பூக்களுக்கு நல்ல விலை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.