ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனத்தையொட்டி தெங்குமரஹாடா கிராமம் உள்ளது. இங்கு 5,000க்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர்.
மலைமுகடுகள் சூழப்பட்ட இக்கிராமத்தில் மாயாறு ஓடுகிறது. கிராம மக்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும், சாகுபடி செய்த விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும் சமவெளிப் பகுதியான சத்தியமங்கலத்துக்கு செல்லவேண்டும். மேலும், இவர்களுக்கு தேவையான நியாய விலை பொருட்களை லாரி மூலம் மாயாற்றை தாண்டி எடுத்துச் செல்வர்.
இந்நிலையில், கூடலூரில் பெய்த கனமழையால் தற்போது மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தெங்குமரஹாடா கிராமத்துக்கும் பவானிசாகருக்கும் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கரையோரத்தில் பரிசலுக்காக காத்திருக்கும் கிராம மக்கள் இதனிடையே, நேற்று மாலை முதல் இக்கிராம மக்கள் பரிசல் மூலம் வெள்ளத்தில் செல்கின்றனர். இந்த பயணம் ஆபத்து என்பதை உணர்ந்தும் வேறுவழியின்றி இதனை மேற்கொண்டுவருகின்றனர்.
வெள்ளத்தை பொருட்படுத்தாமல் பரிசலில் பயணிக்கும் கிராம மக்கள் வெள்ள அபாய காலங்களில் மக்கள் இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் மேற்கொள்வதை தடுக்க மாயாற்றில் புதிய பாலம் கட்ட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.