ஈரோடு:பவானிசாகர் வனப்பகுதியில் தெங்குமரஹாடா கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அன்றாட தேவைக்கு சத்தியமங்கலம், பவானிசாகர், கோத்தகிரி ஆகிய பகுதிகளுக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர். இக்கிராமத்தைச் சுற்றிலும் மாயாறு ஓடுவதால் பரிசல் மூலம் மட்டுமே மாயாற்றை கடந்து செல்ல இயலும். மாயாற்றில் தண்ணீர் குறைவாக இருக்கும்போது காய்கறி லாரிகள், டெம்போ, ஜீப் போன்ற வாகனங்கள் மாயாற்றில் கடந்து செல்லுவது வழக்கம்.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்கள் பரிசலில் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அன்றாட தேவைகள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் மக்கள் காலை நேரத்தில் பேருந்தில் செல்வதற்கு ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றை கடந்து செல்கின்றனர். தற்போது பரிசல் இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டதால் கல்லம்பாளையம், அள்ளிமாயார், சித்திராம்பட்டி, புதுக்காடு, தெங்குமரஹாடா ஆகிய கிராமமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.