ஈரோடு: தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், ஈரோட்டில் நேற்று இரவு பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லிங்காத்தா குட்டையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முத்துசாமி என்ற 80 வயது முதியவர் உயிரிழந்தார்.
நேற்று இரவு அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார். வானிலை மையம் அறிவித்தது போன்று, நேற்று இரவு 9 மணி அளவில் துவங்கிய மழை, விடிய விடிய ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக கொட்டித் தீர்த்தது. இதனால் மாவட்டத்தின் சராசரி மழை அளவு 44.75 மில்லி மீட்டர் என பதிவாகியது. ஈரோட்டில் 80.30 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேல் பெய்த கனமழையின் காரணமாக, ஓடை பாலம் மூழ்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வீடுகளில் இருந்த தங்க நகை, பணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியன வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நாடார் மேடு, மோசிக்கினார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள சமையல் அறை முதல் படுக்கை அறை வரை மழை நீருடன், கழிவு நீரும் கலந்து புகுந்ததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதேபோல, அன்னை சத்யா நகரில் உள்ள ஓடை பாலம் தண்ணீரில் மூழ்கியதோடு, அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அப்போது, சங்கர் என்பவரது வீட்டில் இருந்த அரை பவுன் தங்க நகை மற்றும், 11 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியன தண்ணீரில் அடித்துச் சென்றதோடு, பல்வேறு வீடுகளில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்களும் இழுத்துச் செல்லப்பட்டது.