ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாளபாளையம் வாய்க்காலில் அதே ஊரைச் சேர்ந்த காமராஜ் என்பவர் குளிக்கச் சென்றார். அப்போது புதிய நபர்கள் குளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்த அவர் ஊர் மக்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிபடுத்திய பின் மக்கள் காவல் நிலையத்திற்குத் தகவல் கூறினர். அங்கு வந்த காவல் துறையினர் புதிய நபர்களைப் பிடித்து விசாரித்துபோது திடுக்கிடும் தகவல் வெளியானது.
விசாரணையில், கோபிசெட்டிபாளையம் பகுதியில் நிறைய பணக்காரர்கள் இருப்பதாகவும் இங்கு கொள்ளையடித்தால் வாழ்க்கையில் வசதியுடன் வாழலாம் எனச் சதித்திட்டம் தீட்டி பேசிக்கொண்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்ததாகத் தெரிகிறது.
மேலும், அவர்கள் வந்த நான்கு சக்கர வாகனத்தில் ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.
யார் இவர்கள்?
மேலும், விசாரணையில் இவர்கள் யார் எனவும் தெரியவந்துள்ளது.
- சென்னை நங்கநல்லூர் கன்னித்தமிழ் தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சத்யா என்கிற சத்யநாராயணன் (26),
- சென்னை மடிப்பாக்கம் கிருஷ்ணாநகரைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் ராமச்சந்திரன் (28),
- நங்கநல்லூர் பி.வி. நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் சீதாராமன் (36),
- பழைய பல்லாவரம் சுப்பிரமணியம் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சுரேஷ் என்கிற சுடலைராஜா (26),
- சென்னை மேடவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த சந்திரபோஸ் மகன் மணிகண்டன் (24)
பட்டாக்கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள், அவர்கள் பயன்படுத்திய வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் குறித்து கோபி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.