தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:முதல் நாளிலேயே சுயேச்சை வேட்பாளர்கள் பல கெட்-அப்களில் வேட்பு மனு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் துவங்கிய முதல் நாளில் 234-வது தேர்தலில் போட்டியிடும் தேர்தல் மன்னன், காந்தியவாதி என வித்யாசமான முறைகளில் சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

first day of the nominations for Erode East Assembly by election independent candidates file nominations in different ways
ஈரோடு கிழக்கு சட்டமன்றம் இடைத்தேர்தல் வேட்பு மனு தொடக்கம்... முதல் நாளில் சுயேட்சை வேட்பாளர்கள் அலப்பறைகள்...

By

Published : Jan 31, 2023, 10:59 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: முதல்நாளிலேயே சுயேச்சை வேட்பாளர்கள் விநோதமுறையில் மனுதாக்கல்

ஈரோடுகிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து கிழக்கு சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர் யார் என்பது இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் நீடித்து வருகிறது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிவப்பிரசாத் வேட்பாளராக போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா வேட்பாளராக போட்டியிடுகிறார். தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் ஆனந்த் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் ஏழாம் தேதி உடன் முடிவடைகிறது. எட்டாம் தேதி வேட்பு மனு பரிசீலனையும், பத்தாம் தேதி வேட்பு மனுவை திரும்ப வரும் கடைசி நாளும், மார்ச் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் அகிம் சோசியலிஸ்ட் கட்சியின் காந்தியவாதியான ரமேஷ் பத்தாயிரம் ரூபாயை 10 ரூபாய் நாணயங்களாக கொண்டுவந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இதே போல பிரபல தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் 234-வது முறை தனது சொந்த நிதியில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவு செய்து, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல் என பல்வேறு தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இவர் நரசிம்ம ராவ், வாஜ்பாய், ராகுல் காந்தி, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகியோரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

மதுரை மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (51), அவரது மனைவி இளையராணி(45), அவர்களது ஒரே மகள் சத்யா (24) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். இது குறித்து மாரியப்பன் கூறும் போது, ’நான் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்ட அமைப்பாளராக உள்ளேன். எனது மனைவி துணை அமைப்பாளராக உள்ளார். எனது மகள் பிஏ.பிஎட் முடித்து உள்ளார். நாங்கள் குடும்பத்தினருடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக முடிவு செய்துள்ளோம்.

ஏற்கனவே இங்கு கை சின்னத்தில் வேட்பாளர் உள்ளார். தேர்தல் நடத்தும் அலுவலர் எங்களுக்கு என்ன சின்னம் ஒதுக்குகிறாரோ அதில் நாங்கள் போட்டியிட தயாராக இருக்கிறோம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கின்றோம்’ என்றார். இவரது வேட்பு மனுவுக்கு முன்மொழிய ஆட்கள் இல்லாததால் திரும்பச் சென்றனர்.

இதைப்போல் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(61) என்பவர் 10ஆயிரம் மதிப்புள்ள பத்து ரூபாய் நாணயங்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவர் கூறும் போது, ’நான் அரசு போக்குவரத்துக் கழக டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். ரிசர்வ் வங்கி பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று அறிவித்துள்ளது. ஆனால் வங்கிகள் மற்றும் வெளியிடங்களில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள். அறிவிப்பு ஒன்று. நடைமுறை ஒன்றாக உள்ளது. இதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பத்து ரூபாய் நாணயங்களை எடுத்து வந்துள்ளேன்.

நான் ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே நகர், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 3-வது தேர்தலாகும்’ என்றார். இதே போல நூர் முகமது, தனலட்சுமி, மனிதன் சக்கர பாண்டி, ராஜேந்திரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதில் தேர்தல் மன்னன் பத்மராஜன், நூர் முகமது, ரமேஷ் ஆகியோர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாரியப்பன், இளையராணி, சத்தியா ஆகியோருக்கு முன்மொழிய ஆட்கள் இல்லாததால் திரும்பச் சென்றனர்.

மற்றவர்கள் வேட்பு மனு படிவத்தில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் சென்றனர். வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே சுயேச்சைகள் செய்த அலப்பறைகள் வேடிக்கையாக இருந்தது. மதியம் மூன்று மணிக்கு வேட்பு மனு பெரும் இடத்தில் இருந்த அதிகாரிகள் நேரம் கடந்து விட்டதால் வேட்பு மனு தாக்கல் செய்யும் நேரம் முடிவுற்றதாக அறிவித்தனர்.

இதையும் படிங்க: பாஜகவின் நிலைப்பாட்டிற்கு அதிமுக காத்திருக்கட்டும்; தவறு ஒன்றும் இல்லை - நாராயணன் திருப்பதி

ABOUT THE AUTHOR

...view details