மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு இலவச திருமணம் ஈரோடு:தனியார் அமைப்பினர் சார்பில் ஈரோடு அருகே நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் இலவச திருமண விழாவில், சினிமா பிரபலங்கள், யூடியூபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஈரோடு உணர்வுகள் அமைப்பின் சார்பில் ஐந்து மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமண விழா நிகழ்ச்சி இன்று (நவ. 26) சென்னிமலை அருகில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், உணர்வுகள் அமைப்பின் நிறுவனருமான மக்கள் ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களான துரைசாமி மற்றும் சாந்தி துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினர்.
இதையும் படிங்க:“நாம் கைகாட்டுபவர் பிரதமராக 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
இதனைத் தொடர்ந்து, மணமக்களை உற்சாகப்படுத்தும் விதமாக, நடிகர்கள் ரக்சன், GP முத்து உள்பட பல யூடியூபர்கள் கலந்து கொண்டு சினிமா பாடல்களுக்கும், இசை வாத்தியங்களுக்கும் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர். ஆடல், பாடல், கொண்டாட்டம் என களைகட்டிய இந்த உற்சாக திருமண நிகழ்வில், உறவினர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்று திருமண தம்பதிகளை வாழ்த்தி பரிசளித்தனர். மேலும், மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் அளவிலான சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:"தமிழக மக்களுக்கு 365 நாட்களும் காவிரி நீர் கிடைக்க ஆண்டவனிடம் பிரார்த்தனை" - அண்ணாமலை!