ஈரோட்டில் சொத்து பிரச்சனைக்காக சண்டை ஈரோடு: ஈரோட்டில் வீட்டை வைத்து கடன் வாங்கி, கடனைத் திரும்ப அளிக்காமல் வீட்டில் இருந்தவர்களை அடித்து வெளியேற்றி, பெண்ணின் தலைமுடியை இழுத்து வெளியே தள்ளிச் செல்லும் சண்டை காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம், முனிசிபல் காலனி கொங்கு நகர் 2ஆம் வீதி பகுதியைச் சேர்ந்தவர், கோவிந்தராஜ். இவரது மனைவி கோகிலாம்பால். இவர்களுக்கு மகேந்திரன், தர்மலிங்கம் என்ற இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகேந்திரன் மற்றும் தர்மலிங்கம் ஆகிய இருவரும் தொழில் செய்து வந்துள்ளனர்.
அவர்கள் செய்து வந்த தொழிலில், சுமார் ரூ.5 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டதால், கோவிந்தராஜ், தனது சொத்துக்களை விற்று, ஒவ்வொரு கடனாக அடைத்து வந்துள்ளார். மேலும், கொங்கு நகர் பகுதியில் உள்ள தனது வீட்டை அடமானம் வைத்து கடன் பெற முயற்சி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மகேந்திரன் மாமனாரும், திமுகவின் 36வது வார்டு வட்ட அவைத்தலைவருமான தேவக்குமார் என்பவரிடம் வீட்டை கொடுத்துள்ளனர். தேவக்குமார் தனது பெயரில் வீட்டை மாற்றிக் கொண்டு, தனியார் பைனான்ஸில் அடமானம் வைத்து, ரூ.90 லட்சம் ரூபாய் கடனாக பெற்று தந்துள்ளார். ஆனால், கோவிந்தராஜின் மகன்கள் இருவரும் இதுவரை ஒரு மாத தவணை கூட கட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க:வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டுமா? - தலைமை தேர்தல் அதிகாரி கொடுத்த அப்டேட் என்ன?
இந்நிலையில், கோவிந்தராஜின் இளைய மகன் தர்மலிங்கம், கொங்கு நகர் வீட்டின் மேல் மாடியிலும், கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவியும் கீழ் தளத்திலும் இருந்துள்ளனர். தீபாவளிக்காக கோவிந்தராஜ் சென்ற நிலையில், இளைய மகன் தர்மலிங்கம் வீட்டிற்கு பூட்டு போட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, கோவிந்தராஜ் வந்து பார்த்தபோது, வீடு பூட்டியிருந்ததை அடுத்து, தர்மலிங்கத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தர்மலிங்கம் வருவதற்குள், மகேந்திரனின் மாமனார் மற்றும் திமுகவைச் சேர்ந்த தேவக்குமார் தனது ஆதர்வாளர்ககளுடன் அங்கு வந்துள்ளார். அப்போது, வீட்டுக்கு பூட்டு போட்டது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறி உள்ளது.
இதில், திமுக பிரமுகர் அழைத்து வந்த பெண்கள் தர்மலிங்கத்தின் மனைவியின் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டையிட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வீரப்பன் சத்திரம் காவல்துறையினர், இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சொத்து பிரச்னைக்காக சண்டையிட்டுக் கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க:திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த சுப்பிரமணிய சுவாமி..! விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம்!