ஈரோடு மாவட்டத்தில் அதிகப்படியான முட்டைகோஸ் விளைச்சலால், கிலோ 1 ரூபாய்க்கு கொள்முதல் ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தாளவாடி, கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர், பாரதி நகர், கெட்டவாடி, தலமலை மற்றும் அருள்வாடி உள்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், காலிஃபிளவர் மற்றும் பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிடுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த ஆண்டு முட்டைக்கோஸூக்கு லாபகரமான விலை கிடைத்ததால், இந்த ஆண்டு இப்பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளது. இதன்படி முட்டைகோஸின் வரத்து அதிகமாகியுள்ளதால், அதன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன் காரணமாக முட்டைகோஸ் கிலோ 1 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இவை வெளிச்சந்தையில் கிலோ 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் நாற்று நடுதல், உரம், மருந்து என கிலோவுக்கு 10 ரூபாய் வரை உற்பத்தி செலவாகும் நிலையில், கிலோ 1 ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இதனால் பெரும்பாலான நிலங்களில் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் அப்படியே விடப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:பட்ஜெட் எதிரொலியால் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?