தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பச்சை மிளகாய் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை - சத்தியமங்கலம் செய்திகள்

ஈரோடு: சத்தியமங்கலத்தில் பச்சை மிளகாய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் தங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிளகாய்
மிளகாய்

By

Published : May 30, 2021, 10:58 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாய கிணற்றில் போதிய தண்ணீர் இல்லாத சூழலிலும், தண்ணீரைப் பயன்படுத்தி விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் பச்சை மிளகாய் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது, பச்சை மிளகாய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், ஊரடங்கு காரணமாக அதன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 7க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்திலும் பச்சை மிளகாய் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ஓரளவுக்கு விலை கிடைக்கும் என நினைத்து ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டிருந்தனர். ஆனால், தற்போது முழு ஊரடங்கு காரணமாக, பச்சை மிளகாய்க்கு உரிய விலைக்கு விற்பனையாகததால், விவசாயிகள் பச்சை மிளகாயை பறிக்காமல் செடிகளில் விட்டுவிட்டனர்.

இதனால், பச்சை மிளகாய் பழுத்து செடிகளிலேயே நாசமாகி வருகிறது. ஒருசில விவசாயிகள் மிளகாய் செடிகளைப் பராமரிப்பு செய்து பச்சை மிளகாய்களை பறித்து விற்பனை செய்துவருகின்றனர். வாகனங்களில் காய்கறி விற்பனை செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையிலும், பச்சை மிளகாய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றும், இந்த ஆண்டு பச்சை மிளகாய் பயிரிட்டிருந்த அனைத்து விவசாயிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், பச்சை மிளகாயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details