ஈரோடு: விவசாயிகள்மானாவாரி பயிரான நிலக்கடலை சாகுபடி செய்திருந்த நிலையில், மழையில்லாமல் கருகும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, நிலக்கடலைப் பயிருக்கு காப்பீடு வழங்கவேண்டும் என மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சத்தியமங்கலம், பவானிசாகர் சுற்றுவட்டாரத்தில் 60 விழுக்காட்டுக்கும் மேலான விவசாய நிலங்கள் மானாவாரி நிலங்களாக உள்ளன. இங்குள்ள 50-க்கும் மேலான கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் வைகாசி மற்றும் ஆடிப்பட்டத்தில் கோடை மழையைப் பயன்படுத்தி நிலக்கடலை பயிரை விவசாயிகள் பயிரிடுகின்றனர்.
தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை பயிர்கள், போதிய மழை இல்லாததால் நிலக்கடலைச்செடிகள் காய்ந்து கிடக்கின்றன. எனவே, இந்தாண்டு விளைச்சல் குறைந்து நஷ்டம் ஏற்படும் நிலையில் உள்ளதால், நிலக்கடலை பயிருக்கு காப்பீடு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, 'நிலக்கடலை பயிர் செய்ய உழவு, விதை நடவு, களையெடுத்தல், அறுவடை என 1 ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. தற்போது சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை செடிகள் போதிய மழை பெய்யாததால் காய்ந்துவிட்டன. இதனால் நடப்பாண்டு போதிய விளைச்சல் இருக்காது.
ஆண்டுதோறும் காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு பயிர் காப்பீடு திட்டம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு காரீப் பருவத்திற்கான பயிர் காப்பீடு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
மழையின்றி காய்ந்த நிலக்கடலைப்பயிர்களுக்கு காப்பீடு வசதி வேண்டும்... விவசாயிகள் கோரிக்கை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடும் வறட்சி ஏற்பட்டுச்செடிகள் கருகிய நிலையில், காப்பீடு செய்து இருந்ததால் எங்களுக்கு காப்பீட்டுத்தொகை கிடைத்தது. தற்போது மழையின்றி நிலக்கடலைச்செடிகள் காய்ந்து வருவதால் விவசாயிகளின் நலன் கருதி, நிலக்கடலை பயிருக்கு காப்பீடு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மலை நெல் விவசாயம் அழிந்துபோகாமல் இருக்க அரசு முயற்சிக்கவேண்டும் என பூண்டி கிராம மக்கள் கோரிக்கை