ஈரோடு: புஞ்சை புளியம்பட்டி அருகே மாதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஜல்லிக்குட்டை பகுதியில் குட்டை ஒன்று உள்ளது. இப்பகுதியை ஒரு தரப்பினர் கடந்த 30 ஆண்டுகளாக சுடுகாடாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஜல்லிக்குட்டை பகுதியை சுடுகாடாக பயன்படுத்தக்கூடாது எனவும் நீர்நிலையை பராமரிக்க கோரியும் அப்பகுதி விவசாயிகள் ஈரோடு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதையடுத்து அப்பகுதியில் நீர் வழிப்பாதையை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
100க்கும் மேற்பட்டோர் திரண்டு வாக்குவாதம்
இந்த நிலையில் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த மூதாட்டி ஒருவரின் உடலைப் புதைப்பதற்காக ஜல்லிக்குட்டை பகுதியில் குழி தோண்டும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர். தகவலறிந்த அப்பகுதி விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். உடலைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.