ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி புதுவடவள்ளி அட்டமொக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). மாற்றுத் திறனாளியான இவரின் விவசாயத் தோட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் இவரது தோட்டத்திற்கு நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (செப். 22) அதிகாலை தோட்டத்து வீட்டில் ராமசாமி உறங்கிக் கொண்டிருந்தபோது அவரது நாய் வெளியே குரைக்கும் சத்தம் கேட்டு வெளியோ வந்து பார்த்துள்ளார். அப்போது தோட்டத்திற்குள் காட்டு யானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து காட்டு யானையை விரட்டுவதற்காக சத்தம் போட்டபடி ராமசாமி தோட்டத்திற்குள் சென்றபோது திடீரென காட்டு யானை ராமசாமியை துரத்தி தும்பிக்கையால் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர். பின்னர் படுகாயமடைந்த ராமசாமியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ராமசாமியை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டுயானைகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளி விவசாயியான ராமசாமி காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மயிலாப்பூரில் கலாசார மையம் - அமைச்சர் சேகர் பாபு கூறுவது என்ன?