ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் இரவு நேரத்தில் யானைகள், காட்டுப்பன்றிகள் ஆகியவை அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து, விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், ராகி, கரும்பு, முட்டைகோஸ் போன்ற பயிர்களைச் சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.
இதற்கிடையே, தாளவாடி மலைப்பகுதியில் உள்ள முதியனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமு என்பவர், தனது விளை நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த ராகி பயிரை அறுவடை செய்து, நிலத்தில் காய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். மேலும் இரவு நேரத்தில் காட்டு யானைகள் நடமாட்டத்தால், தினமும் இரவு ராகி பயிருக்கு ராமு காவல் செய்வது வழக்கம்.
அதேபோல், நேற்றிரவு வழக்கம்போல் காவலுக்குச் சென்ற ராமு, இன்று (டிச.30) அதிகாலை காட்டு யானை விளைநிலத்தில் நடமாடுவதைக் கண்டு விரட்ட முயன்றுள்ளார். அப்போது யானை ராமுவைத் துரத்தத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக ராமு ஓடியபோது, காட்டு யானை தும்பிக்கையால் பிடித்து கீழே போட்டு மிதித்ததில் சம்பவ இடத்திலேயே ராமு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சத்தம் கேட்டு அக்கம், பக்கம் இருந்தவர்கள் உடனடியாக காட்டு யானையை விரட்டி அடித்துள்ளனர். பின்னர், இது குறித்து ஆசனூர் காவல் துறையினருக்கும், தாளவாடி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு தாளவாடி மலை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர்.