ஈரோடு மாவட்டம்சத்தியமங்கலம் அருகே உள்ள ராமபைலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்மாசைகுட்டி. இவர் வனப்பகுதியை ஒட்டிய நிலத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார். கடந்த டிசம்பர் 9ஆம் தேதி இரவு, காட்டு யானை ஒன்று அம்மாசை குட்டியின் வாழைத்தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.
இதைப் பார்த்த அம்மாசைகுட்டி யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது யானை தனது தும்பிக்கையால் அம்மாசைகுட்டியை தாக்கியதில் அவர் கீழே விழுந்துள்ளார். அதன்பின் அவரது கால்களின் மீது யானை மிதித்ததில் இரண்டு கால்களும் நசுங்கின.
படுகாயங்களுடன் அடைந்த நிலையில் துடித்துக் கொண்டிருந்த அம்மாசை குட்டியை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று (டிச.21) அதிகாலை அம்மாசைகுட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே யானை தாக்கி உயிரிழந்த விவசாயி அம்மாசைகுட்டியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:யானையும் காட்டு மாடுகளும் தண்ணீர் அருந்தும் வீடியோ