நெடுஞ்சாலையை ஆக்கிரமித்த மழைநீர் ஈரோடு:நசியனூர் அருகே உள்ள பள்ளத்தூர் ஏரியிலிருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறியதால் நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நசியனூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
அதிகப்படியான தண்ணீர், ஓடைகள் வழியாக வெளியேறியதில், நசியனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல், வேலைகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் சென்று வந்தனர்.
இந்த மழை நீர் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நசியனூர் பிரிவு பகுதியில் சூழ்ந்ததால் நெடுஞ்சாலை போக்குவரத்து இருபுறமும் துண்டிக்கப்பட்டது. இதனால் பல கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் மற்றும் சித்தோடு காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிங்க: நெமிலிச்சேரி அருகே திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை.. பயணிகள் அதிர்ச்சி!
தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஈரோடு வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பள்ளத்தூர் பகுதியில் நீர் வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடிந்து விழுந்திருப்பதாகவும், தற்போது அவர்கள் அருகில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பள்ளத்தூர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை முழுவதுமாக வெள்ளநீர் சூழ்ந்து இருப்பதால் அங்கன்வாடி மையத்திற்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வரை எவ்வளவு விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் சேதமடைந்தன என்பது குறித்து எந்த வித முழு தகவல்களையும் வருவாய் துறையினர் சார்பில் தெரிவிக்கப்படவில்லை.
இதே போல் நசியனூர், முள்ளம்பட்டி, வரவங்காடு பகுதியில் உள்ள நீர்வழி பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாக நேற்று இரவு பெய்த கனமழையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் தொடர் மழை.. 22க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம்!