கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்டப் பகுதிகளைத் தொடர்ந்து ஈரோடு கொடுமணலில் தமிழ்நாடு தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் கொடுமணல் அமைந்துள்ளது. அந்தக் கிராமம் பண்டைய கால தமிழ்நாட்டு மக்களின் பெரும் வணிக நகரமாக இருந்துள்ளதால் அங்கு தமிழ்நாடு தொல்லியல் துறையினர், மத்திய தொல்லியல் துறையினர் பல்வேறுகட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளை பல ஆண்டுகளாகச் செய்துவந்தனர்.
அதையடுத்து கரோனா ஊரடங்கு காரணமாக அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கொடுமணல் பகுதியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி இன்று அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் அங்கு இதுவரை ஈமக்குழிகள், பெரிய கற்பலகைகள், இரும்புக் கருவிகளான கத்தி, ஈட்டி, கேடயம் போன்ற 400-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தொல்லியல் துறையினர், "கொடுமணல் பகுதி கிடைக்கப்பெற்ற சிறப்புகளின் ஒன்றாகும். தற்போது இங்கு தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி மாணவர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். ஓரிரு வாரத்தில் குழிகள் தோண்டப்பட்டு பொருள்கள் கண்டெடுக்கப்படும்" எனத் தெரிவித்தனர்
இதையும் படிங்க:மீண்டும் தொடங்கிய கீழடி அகழாய்வுப் பணிகள்!