கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வேலை இழந்து வறுமையில் வாடும் கூலித்தொழிலாளர்கள் தங்களது உணவுத்தேவைக்காக அரசு சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகத்தையே நம்பி உள்ளனர். குறைந்த விலையில் விற்கப்படும் உணவினைக் கூட வாங்கி உண்ண முடியாத நிலையில் பல எளிய மக்கள் உள்ளனர்.
இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் பகுதியில் பல கூலித்தொழிலாளர்கள் ஊரடங்கு காலத்தில் உணவில்லாமல் இருப்பதை அறிந்த கோபி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், ஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, இன்று(மே28) அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.