"மகன் விட்டுச் சென்ற திட்டங்களை செயல்படுத்துவேன்" - ஈவிகேஎஸ் இளங்கோவன்! ஈரோடு:தமிழ்நாடே உற்றுநோக்கிய ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலின் முடிவுகள் நேற்று (மார்ச்.2) வெளியிடப்பட்டது. அதில், மதச்சார்பற்ற திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,923 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,433 வாக்குகளும் பெற்றனர். குறிப்பாக, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் தென்னரசைவிட 66,233 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வெற்றி ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட ஒன்று என்றும், இருப்பினும் இவ்வளவு பெரிய வெற்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் தருவார் என்று எதிர்ப்பார்க்கவில்லை என்றும், இதன் பெருமை அவரையேச் சாரும் என்றும் தெரிவித்தார்.
அதிமுகவின் தோல்வியை எவ்வாறு பார்ப்பது என்று தெரியவில்லை என்றும், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், அதிமுக குறித்து சந்தேகம் இருந்தது, ஆனால், தற்போது அது இல்லை என்பது உறுதியாகிவிட்டதாக கூறினார்.
மேலும், இது நாடாளுமன்ற தேர்தலிற்கான ஒரு முன்னோட்டம் தான் எனவும், அதில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக, நடந்து முடிந்த இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை எனவும் பணநாயகம் தான் வெற்றி பெற்றிருக்கிறது எனவும் எடப்பாடி பழனிசாமி பேசியதாக எழுப்பிய கேள்விக்கு, அவர் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியால் சில உளறல்கள் அப்படி தான் வரும் என்றும் எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் நாகரீகமாக பேச வேண்டும் என்றார்.
மறைந்த திருமகன் ஈவெரா முதலமைச்சரிடம் முன்னுரிமை அடிப்படையில் 10 திட்டங்கள் குறித்து வழங்கியதை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, எவ்வளவு விரைவில் முதலமைச்சரை முதலில் சந்திப்பேன் என்று தெரிவித்தார். மூன்று மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வரவேற்பு கிடைக்காதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்குள் மிகப்பெரிய மதச்சார்பற்ற கூட்டணி உருவாகி கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி: முழு நிலவரம்