தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 5, 2020, 2:02 PM IST

ETV Bharat / state

'வேல் யாத்திரையோ, குட்டிக்கரணமோ... பாஜகவை தமிழ்நாடு ஏற்காது!'

ஈரோடு: பாஜக வேல் யாத்திரை நடத்தினாலும் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ்நாடு மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

காந்தி சிலைக்கு ஈவிகேஸ் இளங்கோவன் மரியாதை
காந்தி சிலைக்கு ஈவிகேஸ் இளங்கோவன் மரியாதை

ஈரோடு கருங்கல்பாளையத்தில் 1970 நவம்பர் 05இல் மகாத்மா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு கர்மவீரர் காமராஜர், சொல்லின் செல்வர் ஈவிகேஎஸ் சம்பத் ஆகியோரால் திறக்கப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

தேசத்தந்தை திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுற்று பொன்விழா காணும் காந்தி சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பூவால் அலங்கரிக்கப்பட்ட காந்தியின் திருவுருவச் சிலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர், "காங்கிரஸ் கட்சி குறித்து யார் விமர்சித்தாலும் அவர்களுக்குப் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன், நளினியை விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றாலும் சட்டம் தனது கடமையைச் செய்தால் அதனை ஏற்றுக்கொள்வோம்.

இந்தியாவில் விவசாயிகள் சுதந்திரமாகச் செயல்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக கட்சியினர் வேல் யாத்திரை போனாலும், எந்தக் குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழ்நாடு மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

திருமாவளவன் கூறியது நூற்றுக்கு நூறு உண்மைதான் அதனை எதிர்ப்பவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என்று மாநில அரசு தடைவிதித்துள்ளது. பட்டாசு வெடிக்க காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும்.

செயல்பாடு ரீதியாக இந்தியாவில் கேரளா முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருப்பதாக மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது சந்தேகத்தை அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details