சென்னிமலை பணிமனையை முற்றுகையிட்டு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் ஈரோடு: தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று (ஜன.9) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அண்ணா தொழிற் சங்கம், சிஐடியு உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இரண்டாவது நாளான இன்றும் (ஜன.10) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்கள், ஈரோடு சென்னி மலை சாலையில் உள்ள காசிபாளையம் போக்குவரத்து பணிமனையினை முற்றுகையிட்டும், போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.
மேலும், பணிமனையிலிருந்து வெளியே வரும் பேருந்துகளை சிறைபிடித்தும், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 13 பணிமனைகளிலிருந்து தற்போது வரை 72 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம்; திருவள்ளூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைப்பு!
அதேபோல், சத்தியமங்கலத்திலும் தொழிலாளர்களின் 2வது நாளாகத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இருப்பினும், தமிழக அரசு பொதுமக்களுக்கு தடை இன்றி பேருந்து சேவை வழங்க போதிய நடவடிக்கை எடுத்து வருவதாக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளர் கூறியதாவது, “தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்குச் செல்லும் 9 தமிழக அரசுப் பேருந்துகள் குறிப்பாக மைசூருக்கும், கொள்ளேகாலுக்கும் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படுவதாக” கூறினார்.
மேலும் சத்தியமங்கலத்திலிருந்து ஈரோடு, திருப்பூர், கோவை, மதுரை, தேனி உள்ளிட்ட நகரங்களுக்கு பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டுள்ளதாகவும், சத்தியமங்கலம் அரசுப் போக்குவரத்து பணிமனையிலிருந்து 57 புறநகர் பேருந்துகளும், 25 நகரப் பேருந்துகளும் புறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். சத்தியமங்கலம் வழியாக மைசூரு, பெங்களூரூ, சிக்மகளுரு ஆகிய இடங்களுக்குச் செல்லும் கர்நாடக அரசுப் பேருந்துகளும் வழக்கம் போல தமிழகத்திற்கு வந்து செல்கின்றன” எனவும் கூறினார்.
முன்னதாக, 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. பொங்கல் பண்டிகை சமயத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதில் இடையூறை ஏற்படுத்தும் என கருதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை ஆணையம், தமிழ்நாடு போக்குவரத்து துறை, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், அரசின் பதிலில் திருப்தி ஏற்படாததால், திட்டமிட்டபடி நேற்று முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரான வழக்கு; இன்று முதல் வழக்காக விசாரணை!