ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள காளிங்கராயன்பாளையத்தில் வேதகிரி, இளந்தளிர், சுரேஷ் ஆகிய மூன்று பேரும் இணைந்து சன் மைக்ரோ நிறுவனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கினர். தங்களது நிறுவனத்தில் ஊழியர்கள் பணிக்கு படித்த ஆண், பெண் தேவை என உள்ளூர் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தியுள்ளனர்.
அப்பகுதியில் உள்ளவர்களை நம்ப வைக்க கன்னியாகுமரி மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தங்களது நிதி நிறுவனம் செயல்படுவதாக விளம்பரப்படுத்தியுள்ளனர். காளிங்கராயன்பாளையத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஆண்களையும், பெண்களையும் அந்நிறுவனத்தில் பணியில் அமர்த்தி மக்களிடையே தங்கள் நிறுவனம் குறித்த நம்பகத்தன்மையையும் அதிகரித்துள்ளனர்.
இதில், மகளிர் சுய உதவிக் குழுவின் மூலமாக கடன் பெறும் பெண்கள் 1,250 ரூபாய், ரூ.1 லட்சம் தனிநபர் கடனுக்கு 5 ஆயிரம் ரூபாய், ரூ. 2 லட்சம் தனிநபர் கடனுக்கு 10 ஆயிரம் ரூபாய், ரூ. 3 லட்சம் தனிநபர் கடனுக்கு 15 ஆயிரம் ரூபாய் முறையே முன்பணம் கட்ட வேண்டும். அப்படி, பணம் கட்டினால் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் கடன்தொகை தானாகவே வந்து சேரும் என்று பரப்புரை செய்யப்பட்டுள்ளது.
இதனை நம்பி 1,300 பேர் முன்பணம் செலுத்தியுள்ள நிலையில், அடுத்த நாள் அந்நிறுவனம் மொத்தமாகப் பூட்டப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் சீட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமின்றி அங்கு பணியாற்றியவர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீட்டுப்பணம் மொத்தத்தையும் எடுத்துக் கொண்டு பங்குதாரர்கள் மூவரும் தப்பித் தலைமறைவாகியது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் கடந்த வாரம் புகார் மனுக்களை வழங்கியுள்ளனர்.