ஈரோடு கருங்கல்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நல்லகுமார். இவரது மகன் அபிராம், ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று(ஏப்ரல் 29) வெளியானது. இதில் அபிராம், 339 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். இருப்பினும் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருப்பதாகத் தனது உறவினர்களிடம் கூறி வருத்தப்பட்ட மாணவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்துகொண்ட மாணவன்
ஈரோடு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால், மனமுடைந்த மாணவர் ஒருவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிற்குள் மகன் துாக்கிட்டு இறந்ததை அறிந்த பெற்றோர்கள் கதறி அழுதனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து கருங்கல்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரங்களில் பிள்ளைகள் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தால், அவர்களின் மனநிலையைக் கண்டு பெற்றோர்கள் குறைகூறாமல், தைரியம் சொல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.