ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சாணார்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித்தொழிலாளி பொன்னுசாமி. இவரது 17 வயது மகன் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக விடுமுறை விடப்பட்ட நிலையில் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பு நடைபெற்றதால் அதில் படித்து வந்தார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 11ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதையடுத்து அவர் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் வீட்டில் இருந்து மாயமானார். அவரது தந்தை பொன்னுசாமி அக்கம்பக்கம், உறவினர் வீடுகளில் தேடி பார்த்து கண்டுபிடிக்க முடியாததால் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் மகன் காணவில்லை என புகார் அளித்தார்.