தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தை தொடங்கி வைத்த ஈரோடு எஸ்.பி., - ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை

ஈரோடு : கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெற்கு காவல் நிலையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பரப்புரை வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தொடங்கி வைத்தார்.

கரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்த ஈரோடு எஸ்.பி!
கரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்த ஈரோடு எஸ்.பி!

By

Published : Aug 13, 2020, 6:51 PM IST

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 164 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதனிடையே நோய்த்தொற்றுக்கு மாவட்டத்திலுள்ள காவல்துறையைச் சேர்ந்த உயர் அலுவலர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நோய் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து முதல் முயற்சியாக ஈரோடு தெற்கு காவல் நிலையத்தினர் சார்பில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு விழிப்புணர்வு பரப்புரை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை இன்று (ஆகஸ்ட் 13) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நின்று நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் பரிசோதனைக்கு அணுக வேண்டிய மருத்துவமனைகள், மருத்துவ அலுவலர்கள், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் உணவு வகைகள், மருந்து வகைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வினைக் கூறும் தொகுப்பை ஒலிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும், நோய்த் தடுப்புக்கு தேவையான முகக் கவசங்களையும் நோய்த் தடுப்பு விழிப்புணர்வு பரப்புரை வாகனம் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

ABOUT THE AUTHOR

...view details