ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குட்டை தயிர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (37). இவர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, ”நான் எனது வீட்டின் அருகில் உள்ள தறிப்பட்டறையில் பணி புரிந்து வருகிறேன். தனக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து வந்த நிலையில், தனது உறவினர் மூலமாக ஒருவர் என்னை அணுகி திருமணம் சம்பந்தமாக எங்களது உறவுக்கார பெண் ஒருவர் இருக்கிறார் என்றும் உங்களுக்கு பொருத்தமாக இருப்பார் என்றும் பேசி முடித்துவிடலாம் என்றும் என்னிடம் கூறினர்.
அதைத்தொடர்ந்து அவிநாசி ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள மணப்பெண்ணின் வீட்டிற்கு சென்றோம். அங்கு பெண்ணை என்னிடம் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது அவர்கள் பெண்ணின் உறவினர் என்று கூறி மேலும் சிலரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
பின்னர் அங்கே உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். அதன்படி பேரோடு மாரியம்மன் கோயிலில் ஜனவரி மாதம் 8ஆம் தேதி திருமணம் நடந்தது. அதற்கு புரோக்கர் கமிஷனாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை எனது உறவினர் அவரது மனைவி மற்றும் பெண்ணின் உறவினர்கள் இடம் அளித்தோம்.
திருமணத்தின்போது எனது மனைவிக்கு நான் ஒரு பவுன் தங்க நகை, தாலிக்கொடி, வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை போட்டேன். என் மனைவி என்னுடன் ஒரு வாரம் மட்டுமே குடும்பம் நடத்தினார். மறு வீட்டிற்காக கோயம்புத்தூரில் உள்ள என் மனைவியின் சித்தி வீட்டுக்கு என்னை அழைத்ததின் பேரில் என் மனைவி உடன் நான் சென்றேன். பின்னர் எனது மனைவி அண்ணன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார். நான் அவரை பல்லடம் பஸ் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு அங்கு விட்டுவிட்டு நான் மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
என் மனைவி நான்கு நாட்கள் கழித்து வீட்டுக்கு வருகிறேன் என்றார். அதை நம்பி நானும் ஒன்றும் சொல்லாமல் வந்துவிட்டேன். நான் மீண்டும் என் மனைவிக்கு போன் செய்தபோது அவர் இன்னும் நான்கு நாட்களில் வருவதாக கூறினார்.
தேவி - முருகேசன் திருமணம் அதன் பின்னர் போன் செய்தபோது அவர் சரிவர பதில் சொல்லவில்லை. பின்னர் என் செல்போன் அழைப்பை அவர் ஏற்கவில்லை. இது குறித்து எனது உறவினர், அவரது மனைவியிடம் கேட்டபோது நீங்கள் அவரது சித்தி, திருமணத்தின்போது வந்த உறவினர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று பதில் செல்லி நழுவி விட்டனர்.
இதனால் சந்தேகம் அடைந்த நான் கோயம்புத்தூரில் உள்ள சித்தி வீட்டிற்கு சென்று விசாரித்தபோது அவர் எனது மனைவின் சித்தியே இல்லை என்றும் அவர் ஒரு புரோக்கர் என்று தெரியவந்தது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அவர்கள் குறித்து விசாரித்தபோது அவர்கள் அனைவரும் இப்படித்தான் திருமணமாகாத பல நபர்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்து பணம் பறித்ததாக என்னிடம் சொன்னார்கள்.
இதனால் நான் ஏமாற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். என் மனைவியை பற்றி விசாரித்தபோது அவர் இதே போன்று ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளதாகவும், தற்போது நான்காவது திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும் கேள்விப்பட்டேன். என்னை நம்ப வைத்து கூட்டு சதி செய்து என்னிடம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்க பணமும், ஒரு பவுன் தாலிக்கொடி, வெள்ளி கொலுசு ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு என்னை ஏமாற்றி மோசடி செய்துள்ளார்கள்.
முருகேசனின் தயார் செய்தியாளர்கள் சந்திப்பு இதுகுறித்து சித்தோடு காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளேன். காவல் துறையினர் அவர்களை விசாரணைக்கு அழைத்தனர் ஆனால் இதுவரை அவர்கள் வரவில்லை. எனவே என்னை ஏமாற்றிய எனது மனைவி, உறவினர்கள் அனைவரும் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து எனது பணம், நகைகளை மீட்டுத்தர வேண்டும்" என புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட முருகேசனின் தாயார் சம்பூர்ணம் அம்மாள் தெரிவிக்கையில், தேவி என்கிற எனது மருமகள் நாங்கள் அளித்த தாலிக்கொடி, கொலுசு உள்ளிட்ட அணிகலன்களை கொடுத்துவிட்டு பிரிந்து சென்றுவிடுமாறு கூறினார்.