தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட ஈரோடு ஸ்மார்ட் சிட்டி வணிக வளாகம் - தற்போதைய நிலை என்ன? - Erode Smart City issue

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சியில் கட்டி முடிக்கபட்டு முதலமைச்சரால் திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் பலமடங்கு முன் தொகையால் வியாபாரிகள் கடைகளை எடுக்க முன்வராததால், 10 மாதங்களாக பயன்பாடின்றி தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 15, 2023, 8:18 AM IST

பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஈரோடு ஸ்மார்ட் சிட்டி வணிக வளாகம்

ஈரோடு:ஈரோடு மாநகரம் ஜவுளி, மஞ்சள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தலை சிறந்த நகரமாக இருந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திற்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வரையில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இதில் ஈரோடு நகரின் மையப்பகுதியில் உள்ள அப்துல் கனி ஜவுளி மார்க்கெட்டில் வாரந்தோறும் நடைபெறும் வாரச் சந்தை மற்றும் தினசரி ஜவுளி கடைகளால் ஈரோடு நகரம் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பாக காணப்பட்டு வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இங்கு செயல்பட்டு வந்த சுமார் 730 கடைகளில் 500க்கும் மேற்பட்ட கடைகளை அப்புறப்படுத்தி, வணிக வளாகம் கட்டுவதற்காக முதலில் 51 கோடி ரூபாய் நிதி ஓதுக்கபட்டது.

200 கடைகள், 3 அடுக்கு கடைகள், நகரும் படிக்கட்டு, கீழ் தளம் கார் பார்க்கிங் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சத்துடன் இறுதியில் 54 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர், ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும் இதே வணிக வளாகம் போன்று ரயில் நிலையம் அருகே உள்ள காளை மாட்டு சிலை சந்திப்பு பகுதியில் உள்ள பழைய கட்டடத்தை இடித்து அகற்றி, அங்கும் 17 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான வணிக வளாகம் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் இந்த புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு முன்பாக ஏற்கனவே இருந்த வியாபாரிகளுக்குத்தான் கடைகளை ஒதுக்கீடு செய்யப்படும் என்று கடைகளை அகற்றி விட்டு, புதிய வணிக வளாகம் கட்டி முடித்து திறக்கப்பட்டதும் பொது ஏலத்தில் விடப்படும் என்று கூறி உள்ளனர். மேலும், மாதம் 32,500 ரூபாய் வாடகை, சேவை வரி, ஜிஎஸ்டி, முன் வைப்புத் தொகை, 24 மாத வாடகை அட்வான்ஸ் என சுமார் 12 லட்சம் ரூபாய் வரையில் என முன்னதாகவே சிறு, குறு வியாபாரிகளிடம் பணத்தை கேட்டுள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜவுளி வியாபாரிகள், புதிய வணிக வளாகத்தில் கடை அமைக்க முன்வரவில்லை. யாரும் முன் வராத காரணத்தினால் முதலமைச்சர் திறந்து வைத்த வணிக வளாகம் திறப்பு விழா கண்டதுடன் 10 மாதமாக பயன்பாடு இல்லாமல் உள்ளதுடன், இரவில் சில தவறான செயல்களுக்கு மாறி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு மக்களின் வரிப்பணத்தில் கட்டிய கட்டடம் ஏழை, எளிய வியாபாரிகள் தொழில் செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்த இடமாக மாற்ற வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: விளங்காத அதிமுக அரசு - விடியா திமுக அரசு: ஈரோடு மன்றக் கூட்டத்தில் உச்சகட்ட மோதல்!

ABOUT THE AUTHOR

...view details