ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மாவட்டங்களிலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்பு மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய அலுவலகத்திலும் மாவட்ட ஊராட்சி வார்டுகள், சிற்றூராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் மூன்றாவது நாளாக பெற்றுக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த முகாசிபிடாரியூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கும், ஓட்டப்பாறையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கும் அதிமுகவைச் சேர்ந்த நாகராஜன், தங்கவேல் ஆகிய இருவரும் தங்களது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினர்.
அதேபோல் பவானி, அம்மாபேட்டை, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்புமனு தாக்கல் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.