ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதகாலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் சவண்டப்பூர் பவானி ஆற்றுப்பாலத்தின் மீது காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அத்தாணி பேரூராட்சிக்குட்பட்ட ஆறாவது வார்டு, புதுக்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருவதாகவும், இப்பகுதிக்கு கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் நாள் ஒன்றுக்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், குடும்பத்திற்கு ஒருவர் வேலைக்கு செல்லாமல் குடிநீருக்காக அலைய வேண்டியுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.