ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள மஞ்சகாட்டு வலசு பகுதியில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கோழிக்குஞ்சு பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து முட்டை கழிவுகள், ஊனமுற்றக் கோழிகள் உயிருடன் அருகே செல்லும் பயன்படுத்தப்படாத பள்ளத்தில் வெளியேற்றப்படுகிறது. இதனால் மஞ்சகாட்டுவலசு, துாரபாளையம், காட்டுபாளையம், பெருமாபாளையம், மேட்டூர், சாவடிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, இந்தக் கழிவுநீர் அருகே செல்லும் காலிங்கராயன் வாய்க்காலில் கலப்பதால், விளைநிலம், நிலத்தடி நீர், கிணறுகள் உள்ளிட்டவைகள் மாசடைகிறது.
கொட்டப்படும் கழிவுகள்: தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்! - Public protest
ஈரோடு: மொடக்குறிச்சியல் செயல்பட்டு வரும் தனியார் கோழிக்குஞ்சு பொறிப்பகத்திலிருந்து முட்டை கழிவுகள் மற்றும் உயிருடன் கோழிகளை அருகே உள்ள பள்ளத்தில் கொட்டுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகக்கூறி, அப்பகுதி மக்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், மொடக்குறிச்சி தாசில்தாரிடமும் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நேற்று அந்த நிறுவனத்திலிருந்து ஊனமுற்ற கோழிக்குஞ்சுகள், கழிவுகளை வெளியேற்றியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியுள்ளதால், இதனைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அந்நிறுவனத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றுவதாகவும், கோழிக்குஞ்சுகளை வெளியே கொட்டாமல் அதனை மீன் பண்ணைகளுக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.