ஈரோடு:பெருந்துறை அருகே தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்த விபத்தில், 17 மாணவ மாணவிகள் காயமடைந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதி பகுதியில், தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஈரோடு, திருப்பூர் என சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மேலும் இந்தக் கல்லூரியில் மாணவ - மாணவிகளை அழைத்து வர கல்லூரி நிர்வாகம் சார்பில், போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று வழக்கம்போல் திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரிப் பேருந்து வந்து கொண்டிருந்துள்ளது.
இதையும் படிங்க: அரசுப் பணி வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்த திமுக பிரமுகர் கைது.. தென்காசியில் பரபரப்பு!
அப்போது பெருந்துறை அடுத்த மேட்டுப்புதூர் பகுதியில் வளைவு ஒன்றில் திரும்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த மாணவ மாணவிகளுள் 17 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த பெருந்துறை காவல் நிலைய போலீசார், சாலையின் குறுக்கே கிடந்த கல்லூரிப் பேருந்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கல்லூரி பேருந்து ஓட்டுநர் பாலசுப்பிரமணியத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: “நடிகை குஷ்பு அனாவசியமாக பேசுகிறார்”.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்!