ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி தென்காட்டுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியராக ஜெயக்குமார் என்பவரது மனைவி ஏசுமரியாள் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக தென்காட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆசிரியர்கள் உண்மைத்தன்மை சான்று வழங்க அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து ஏசுமரியாள் அவருடைய சான்றிதழ்களை சென்னையில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருடைய ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை பரிசோதனை செய்ததில் அவை போலியான சான்றுகள் எனத் தெரியவந்தது. மேலும், ஏசுமரியாள் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து விசாரணை நடத்த ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது.