ஈரோடு:கோபிசெட்டிபாளையம் துறையம்பாளையத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வந்தார். கர்நாடகா மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்குச்செல்வது இவரது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், கரும்பு வெட்டும் வேலைக்குச்சென்ற மூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து, மூர்த்தியின் மகன்கள் கார்த்தி மற்றும் பிரபுகுமார் ஆகியோர் பல இடங்களில் தந்தை மூர்த்தியைத் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், தேடுவதைத் தொடர்ந்தனர். இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையப்பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக மூர்த்தியின் உறவினர்கள், அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து மூர்த்தியின் மகன் கார்த்திக் சத்தியமங்கலம் சென்று பார்த்த போது, முகம் அழுகிய நிலையில் இருந்தாலும் அவரது தந்தையைப் போன்ற தோற்றத்துடன் இருந்ததால், இறந்து கிடந்தது தனது தந்தை தான் என தன் மகன்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து, உடனே சடலத்தை எடுத்துக்கொண்டு துறையம்பாளையம் கொண்டு சென்று உரிய முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்தார்.
இந்நிலையில் இறந்து போனதாகக்கூறி அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியிலிருந்து கரும்பு வெட்டும் பணியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு துறையம்பாளையத்தில் உள்ள தனது வீடு திரும்பி உள்ளார். அப்போது, அவரைப் பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.