ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் நகர பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, குடிசை வீடுகளே அதிகளவில் உள்ளன.
இப்பகுதி மக்களின் தினசரி பயன்பாட்டிற்காக கடந்த பல ஆண்டுகளாக பொதுக் கழிப்பிடமொன்று அப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்தி வருவதால் மிகவும் பயனுள்ளதாக இந்தக் கழிப்பிடம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் மாநகராட்சி துறையினர் பொதுக்கழிப்பிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு பொதுக்கழிப்பிடம் அமைந்துள்ள பகுதியினை பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்முடிவிற்கு அம்மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பயன்பாட்டிலுள்ள பொதுக்கழிப்பிடத்தை இடித்துவிடக் கூடாது என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், பொதுக்கழிப்பிடத்தை இடிக்க ஜேசிபி இயந்திரம் வந்ததால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த மாநகராட்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் பொதுக்கழிப்பிடத்தை இடிக்க மாட்டோம் என்று உறுதி வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பொதுக்கழிப்பிடத்தை இடித்து அகற்றுவதை தற்போது கைவிட்டிருப்பதாகவும் பொதுமக்கள் இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் பேசி முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்த மாநகராட்சி அலுவலர்கள், ஜேசிபி இயந்திரத்தை திருப்பி அனுப்பினர்.
இதையும் படிங்க:உதகையில் நகராட்சி சந்தையை திறக்கக் கோரி வியாபாரிகள் போராட்டம்!