ஈரோடு: ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் தொடர்புடைய சிறுமியின் தாய், அவரது இரண்டாவது கணவர், இடைத்தரகர் மாலதி மற்றும் ஆதார் அடையாள அட்டையை போலியாக தயாரித்து வழங்கிய ஜான் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஈரோடு சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம் பிரசாத் மருத்துவமனை ஸ்கேன் சென்டர்களுக்கு முதற்கட்டமாக சீல் வைக்கவும், இதற்காக 15 நாட்கள் அவகாசம் அளித்து நோயாளிகளை வெளியேற்றவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
ஆனால், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தனி நீதிபதி, மருத்துவமனைக்கு தமிழ்நாடு அரசு சீல் வைக்கபட்டதை ரத்து செய்தும், நோயாளிகளை மீண்டும் அனுமதிக்கவும் உத்தரவிட்டார்.
இவ்வாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தலைமை நீதிபதி அமர்வுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.