ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக சிறுமியின் தாயார் சுமையா, தாயாரின் இரண்டாவது கணவர் சையத் அலி, தரகர் மாலதி மற்றும் ஆதார் கார்டு திருத்தம் செய்து கொடுத்த ஜான் உள்ளிட்ட நான்கு பேரை ஈரோடு தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்கள் கருமுட்டை பெற்றதாக ஈரோடு, சேலம், பெருந்துறை மற்றும் ஓசூர் உள்ளிட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று (ஜூலை 7) தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில், மல்லிகை, துரைராஜ், சரண்யா ஜெயக்குமார் மற்றும் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் ஈரோடு சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம் பிரசாத் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ள காப்பகத்தில் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். இதனிடையே தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமியிடம், பாஜகவின் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.செந்தில் தலைமையிலான கட்சியினர் புகார் அளித்தனர்.
ஈரோட்டில் 16- வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விசாரணை. இதுகுறித்து செந்தில் கூறுகையில், “விசாரணைக் குழுவினரிடம் வெளிப்படைத் தன்மை இல்லை. சிறுமிக்கு பாதுகாப்பும் இல்லை. சம்பந்தப்பட்ட மருத்துவமனை, தனது இணையத்தில் 50,000 க்கும் மேற்பட்ட பெண்களிடம் கருமுட்டை பெற்றதாக தெரிவித்துள்ளது. எந்த விதமான கேள்விகளுக்கும் முறையான பதில் இல்லை. எனவே இந்த விசாரணைக்குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோகுல்ராஜ் கொலை வழக்கு: தண்டனையை ரத்து செய்யக்கோரிய மனுவின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு