ஈரோடு மாவட்டத்தின் மையப்பகுதியில் நேதாஜி தினசரி காய்கறிச்சந்தையில் மொத்தம், சில்லறை விற்பனைக் கடைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டுவந்தன. கரோனா நோய்த்தொற்று காரணமாக சந்தை செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதியை மறுத்தது.
இதையடுத்து, கடைகள் தகுந்த இடைவெளியுடனும் கட்டுப்பாடுகளுடனும் பேருந்து நிலையத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரையில் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு காய்கறி விற்பனைசெய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
அதன்படி, கடந்த இரண்டு மாதங்களாக காய்கறிக் கடைகள் ஈரோடு பெரிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவந்தன. இந்நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்தவுடன் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவந்த காய்கறிக் கடைகளை பேருந்து நிலையம் அருகே உள்ள வ.உ. சிதம்பரனார் பூங்கா பகுதியில் மாற்றம்செய்ய மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.