ஈரோடு :தாளவாடி அருகே உள்ள திகனாரை கிராமத்தில், பிரசித்தி பெற்ற ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். தற்போது கரோனா இன்றி இயல்புநிலை திரும்பியுள்ளதால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கணபதி பூஜையுடன் தெப்ப திருவிழா மீண்டும் தொடங்கியது.
கோயிலில் உள்ள ரங்கசாமி, மல்லிகார்ஜுனா சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்துடன் உற்சவ சிலைகள், சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது சாமிக்கு புனிதநீர் ஊற்றி மேள தாளத்துடன் பக்தர்கள் வழிபட்டனர்.
இதனைத்தொடர்ந்து சப்பரம் தெப்ப திருவிழாவுக்காக கோயில் குளத்தை அடைந்தது. அங்கு பக்தர்கள் 10,000 தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து குளத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனையடுத்து சப்பரத்துடன் வடிவமைக்கப்பட்ட தேரில் சாமி குளத்தை மூன்று முறை சுற்றி வந்தது.